பிரதமர் மோடி சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி


பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்று மத்திய, மாநில அரசுகள் பேனர் வைத்தால், அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. | சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் தொடர்ந்து கண்டிப்பு காட்டி வரும் சென்னை உயர்நீதிமன்றம், இளம் பெண் சுப ஸ்ரீ மரணத்தை தொடர்ந்து, கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது. இந் நிலையில் , மாமல்லபுரத்திற்கு பேச்சுவார்த்தைக்காக வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க, மத்திய மாநில அரசுகள் சார்பில் வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரையிலான பேனர் வைக்க ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில், விசாரணைக்கு வந்தது. விதி மீறல் பேனர் வழக்கில் அக்டோபர் 1ஆம் தேதி அரசு தாக்கல் செய்த உத்தரவாதத்தை மீறியோ, பொதுமக்களுக்கு இடையூறாகவோ பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். மாமல்லபுரம் வரும் மோடி, ஜின்பிங்கை வரவேற்க பேனர்கள் வைக்கப்போவதாகவும் அதில் எவ்வித விதிமீறலும் இருக்காது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பேனர் வைக்ககூடாது என்ற உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதன்படி எந்த அரசியல் கட்சியும் பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். பிரதமரும், சீன அதிபரும், சாலை மார்க்கமாக செல்ல இருப்பதால் அரசு சார்பில் பேனர் வைத்து வரவேற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு சார்பில் பேனர் வைக்க அனுமதி கோருவது என்பது எதிர்கால திட்டத்திற்கான மறை முக நோக்கம் என்பதால், அனுமதிக்க கூடாது என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். விதிகள் வகுக்கப்பட்டால் பொதுமக்கள் மதிப்பது போல, அரசும் பின்பற்ற வேண்டும் என்றும், ஆளுங்கட்சி இதுவரை உத்தரவாதம் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறினார். டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுகிறதா என அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்படி எந்த பேனரும் வைக்கப்படுவதில்லை என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம்தான் என்றும், விமானநிலையத்தில் வைக்க அனுமதிக்கப்படுவதாகவும், டிஜிட்டல் பேனர் அச்சகங்கள் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார். இதையடுத்து, மத்திய மாநில அரசுகள் பேனர் வைக்க முடிவெடுத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், விதிமீறல் பேனர் வைக்க மாட்டோம் என கடந்த டிசம்பர் உத்தரவாதம் தாக்கல் செய்ய சொன்னது அரசியல் கட்சிகளை மட்டும்தான் என்றும் நீதிபதிகள் கூறினர். பே ன ர் க ள் வைக்கும் போது உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும் என்றும் , அரசமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள குடிமக்களின் தனிமனித வாழ்வுரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்காமல் பேனர் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்.